சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் 600 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைப்பட்டு, அங்கு 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. ரயில்பெட்டிகளும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் பிரபலமான வர்த்தக மையம் தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மையம் சென்னை விமானநிலையத்தில் இருந்து 5.5 கிமீ தொலைவில் நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ளது.
வர்த்தகம் தொடர்பான அனைத்து செயல்பாடுகளையும் ஊக்குவிப்பதற்காக இந்த மையம் ஏற்படுத்தப்பட்டது. 25.48 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மையத்தில் 3 பெரிய கண்காட்சி அரங்குகள், எவ்விதமான பில்லர்களும் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி, 2 ஆயிரம் கார்களை நிறுத்துவதற்கான வசதி, பாதுகாவலர் வசதி, ஏடிஎம் வசதி, கழிப்பறை வசதி போன்ற ஏராளமான வசதிகள் உள்ளன.இந்நிலையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், இந்த மையத்தில் தற்போது 600 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேவைப்படின் படுக்கை வசதிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையத்திலும் மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் வைப்பதற்கான பிரத்யேக இடமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.