நோயாளி குழந்தைக்கு ஒட்டகப்பால் சுமந்து வந்த ரயில்…
மன்னன் புலிப்பால் கேட்ட கதை புராணங்களில் அறிவோம்.
ஒட்டகப்பாலை, சிறப்பு ரயில் சுமந்து வந்த கதை இப்போது:
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மூன்றரை வயதுக் குழந்தை ஆடிஸம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டகப்பால் தான் அந்த குழந்தையின் உணவு. ஊரடங்கால் ஒட்டகப்பால் கிடைக்காததால், குழந்தையின் தாய் துடித்துப்போனாள்.
டிவிட்டரில், தனது துயரத்தைப் பதிவு செய்த அந்த பெண், ராஜஸ்தான் மாநிலம் சத்ரி என்ற இடத்தில் ஒட்டகப்பால் தாராளமாகக் கிடைக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.
டிவிட்டரை வாசித்தவர்களில் ஒடிசா மாநிலத்தில் பணிபுரியும் ஐ.பி.எஸ்.அதிகாரி அருண் போத்ராவும் ஒருவர். அங்குள்ள மின் வாரியத்தில் தலைமை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
அவருக்குச் சொந்த மாநிலம் ராஜஸ்தான்.
ஏகப்பட்ட தொலைப்பேசி தொடர்புகளுக்குப் பின்னர், சத்ரியில் உள்ள ஒட்டகப்பால் விற்பனையாளர், போத்ராவின் லைனில் வந்தார்.
ஒட்டகப்பால், தன்னிடம் இருப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
‘பத்திரமாக வைத்திருங்கள்’’ என்று அவரிடம் தெரிவித்த போத்ரா-
ராஜஸ்தானில் இருந்து பாலை எப்படிக் கொண்டு வருவது என்று யோசித்தார்.
’பாலை கொண்டு வந்தே தீருவது’’ என்று சபதம் எடுத்து பகீரத பிரயத்தனங்களில் ஈடுபட்டார்.
பலன் கிடைத்தது.
லூதியானாவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வழியாக ஒரு சரக்கு ரயில் மும்பை வந்து கொண்டிருப்பதாக போத்ராவுக்கு தகவல் கிடைத்தது.
துள்ளிக்குதித்தார்.
ரயில்வேயின் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார்.
செய்தி சொன்னார். பாலின் அவசரம் சொன்னார்.
சடுதியில், அவசர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒட்டகப்பால் விற்பனையாளரின் ஊர், அந்த ரயில் கடந்து போகும் ‘பால்னா’ என்ற ரயில்வே நிலையத்தில் இருந்து சற்று தூரத்தில் இருப்பது தெரிய வந்தது.
பால்னா ரயில் நிலையத்துக்கு, ஒட்டகப்பால் கொண்டு வர , விற்பனையாளர் பணிக்கப்பட்டார்.
இங்கே விதி விளையாடியது.
பால்னா ரயில் நிலையத்தில் அந்த சரக்கு ரயில் நிற்காது என்று தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே உயர் அதிகாரிகளை ஐ.பி.எஸ்.அதிகாரி போத்ரா கெஞ்சி, கூத்தாடி, ’பால்னா’ நிலையத்தில் சரக்கு ரயிலை நிறுத்த ஏற்பாடு செய்தார்.
அவர் மேற்கொண்ட முயற்சிகளால், அங்கே ரயில் நிறுத்தப்பட்டது.
விற்பனையாளர் கொண்டு வந்திருந்த 20 லிட்டர் ஒட்டகப்பாலும்,20 கிலோ ஒட்டக பவுடரும், அந்த சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டது.
ஒட்டகப்பால் சுமந்து, மும்பை வந்தது சரக்கு ரயில்.
ஆடிஸம் பாதித்த சிறுவன், காப்பாற்றப்பட்டான்.