திருவனந்தபுரம்
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது எப்படி என்பதை இங்கு காண்போம்
இந்தியாவின் முதல் கொரோனா தாக்குதல் சென்ற ஜனவரி இறுதியில் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டது. அதையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அங்கு வெளிநாட்டில் வாழ்வோர் எண்ணிக்கையும் மக்கள் தொகையும் அதிகமாக உள்ளதாகவும், மருத்துவ வசதிகள் சரியாக இல்லாததாலும் இவ்வாறு நிகழ்வதாக பலரும் தெரிவித்து வந்தனர்.
ஆனால் கேரள மாநிலத்தில் அமைதியாக கொரோனாவுக்கு எதிரான போர் நிகழ்ந்து வந்தது. அதை நிரூபிப்பது போல் 93 வயதான ஒரு முதியவரும் 88 வயதான அவரது மனைவியும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த செய்தி வெளியானது. வயது முதிர்ந்தோர் என்றாலே கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாது எனக் கூறியதை இருவரும் பொய்யாக்கினார்கள்.
தற்போது கேரளாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. முன்பு முதல் இடத்தில் இருந்த கேரளாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 364 ஆக உள்ளது. முதலிடமான மகாராஷ்டிராவில் 1574 பேரும் இரண்டாம் இடமான தமிழகத்தில் 911 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் கேரள அரசு மேற்கொண்ட சோதனை, சோதனை, மேலும் சோதனையே ஆகும்.
வெளிநாட்டில் இருந்து வருவோர் விவரங்களை வெளியில் சொல்லாததால் பாதிப்பு அதிகமாகிறது என்பதற்காக சுமார் 30000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். அத்துடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்குத் தொடர்புடைய அனைவரும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அறிகுறிகள் காணப்பட்டவர்கள் உடனடியாக தனிமையில் வைக்கப்பட்டனர்.
தேசிய ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்றாக உள்ளது. இங்கு நாட்டில் அதிக அளவில் வெளிமாநில தொழிலாளர்களுக்கான முகாம்களமைக்கபட்டுள்ளன. இவர்களுக்குத் தினமும் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. அது மட்டுமின்றி ஆதரவற்றோர், வீடற்றோர் போன்றவர்களுக்கும் உணவு, இருப்பிடம் அளித்து யாரையும் வெளியே அலையவிடாமல் கேரள அரசு பாதுகாத்து வருகிறது.
கேரள மாநில சுகாதாராமைசர் கே கே ஷைலஜா, “கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதனால் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் இது எந்நேரமும் அதிகரிக்கலாம் எனப் பயமாக உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பதை நம்மால் கூற முடியாது>” என தெரிவித்துள்ளார்.
தொற்று நோய் நிபுணரான சாகித் ஜமீல், “கேரள மாநிலத்தில் பாதிப்பு மிக மோசமாக இருக்கும் எனப் பயந்திருந்தோம். ஆனால் அவ்வளவு பாதிப்பு இல்லை. இதற்கு அரசு எடுத்த மனிதாபிமான மற்றும் கடுமையான நடவடிக்கைகளே காரணம் ஆகும். கண்டறிதல், தொடர் சோதனை, தனிமைப்படுத்தல், சிகிச்சை ஆகியவை இதற்கு மிகவும் உதவி இருக்கின்றன.” என கூறி உள்ளார்.
சுற்றுலா பயணிகளின் சொர்க்கம் என வர்ணிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் வரும் பயணிகளை விமான நிலையத்திலேயே சோதிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டது. குறிப்பாக அதிக அளவில் கொரோனா பாதிப்புள்ள ஈரான், தென் கொரியா போன்ற நாட்டுமகக்ளை பிப்ரவரி 10 முதல் வந்த உடன் தனிமைப்படுத்தும் பணி தொடங்கியது. குறிப்பாக ஒரு முறை தனிமைக்காகத்தை முடிக்காமல் வெளிநாடு செல்ல முயன்ற பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்
கேரள மாநிலம் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலம் ஆகும். எனவே இங்குள்ள மக்களுக்கு கொரோனா குறித்து அறிவுறுத்துவது எளிதாக இருந்துள்ளது. எனவே பலரும் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துக் கொண்டனர். இந்த மாதம் முதல் வாரம் கேரளாவில் 13000க்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டனர்.
இது மொத்த இந்தியாவில் நடந்த பரிசோதனைகளில் 10% ஆகும். அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 6000 பரிசோதனைகளும் இந்திய அளவில் இரண்டாவதாக உள்ள தமிழகத்தில் 8000 பரிசோதனைகள் மட்டுமே நடந்துள்ளன. துரித சோதனை சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்திய மாநிலம் கேரளா என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.