பெங்களூர்:
ரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பாஜக-வை சேர்ந்த எம்எல்ஏ பந்தாவாக 100 விருந்தினருடன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 24-ஆம் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது பிரதமர் மோடி இதை அறிவித்தார்.

பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 18 நாட்கள் ஆகிவிட்டன, என்றாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை முற்றிலும் மீறும் விதமாக, கர்நாடகாவின் துருவேகரே தொகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ மசாலா ஜெயராம் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பந்தாவான விருந்தை கொண்டாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விருந்தில் 100 க்கும் மேற்பட்ட வி.ஐ.பி விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

அவரது தொகுதியில் உள்ள பாஜக எம்எல்ஏவின் இல்லத்தில் விருந்து நடைபெற்றதாகவும், விருந்தினர்களுக்கு விருந்தில் பிரியாணி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.