டெல்லி:
பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே வரும்போது, முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும், அணியாவிட்டால் 1 மாதம் முதல் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று டெல்லி மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க பல மாநில அரசுகள் மத்தியஅரசிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இதற்கிடையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைக்காக வீட்டைவிட்டு வெளியே வரும்போது, முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆனால், பலர் அதை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிவது கட்டாயம் என மகாராஷ்டிரா மாநில அரசு முதன்முதலாக உத்தரவு போட்டது. அதைத்தொடர்ந்து மேலும் சில மாநிலங்களும் முக கவசம் அணிவது கட்டாயம், மீறினால் தண்டனை என உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது டெல்லி அரசும், முக கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டு உள்ளது. முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிபவர்களுக்கு 1 மாதம் முதல் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது.
மேலும் பல இடங்கள் சீல் வைக்கப்பட்டு உள்ளது. டெல்லியில், சீல் வைக்கப்படவுள்ள 20 ஹாட்ஸ்பாட்களில் மார்கஸ் மஸ்ஜித் மற்றும் நிஜாமுதீன் பாஸ்தி, துவாரகாவின் ஷாஹாகஹானாபாத் சமூகம், மயூர் விஹார், பட்பர்கஞ்ச், மால்வியா நகர், சங்கம் விஹார், சீமாபுரி, வசுந்தரா என்க்ளேவ் மற்றும் தில்ஷாத் கார்டன் ஆகியவை அடங்கும்.
கொனாட் பிளேஸுக்கு அருகிலுள்ள பிரபலமான பெங்காலி சந்தையும் நேற்று சீல் வைக்கப்பட்டது.