புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரில் 42% பேர், 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம்.
சுகாதார அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த நோயாளிகளில் 42% பேர் 21 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். 9% பேர் 20 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 33% பேர் 41 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும் உள்ளனர். 17% பேர் 60 வயதை கடந்தவர்களாகவும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 3,374 பேர் பாதிக்கப்பட்டு, 77 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 472 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அடுத்த சில நாட்களில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்ற எச்சரிக்கையும் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.