வாஷிங்டன்: கொரோனா கோரத்தாண்டவம் ஒருபக்கம் இருந்தாலும், வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்.
அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற்று டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி, இந்தாண்டு அதிபர் தேர்தல் நடந்தாக வேண்டும்.

தற்போது, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.75 லட்சத்தை தாண்டியுள்ளது மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,100ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. வைரஸ் தீவிரமடைந்து வருவதால், பல மாகாணங்களில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வைரஸின் தொற்று வீரியம் குறையாமல் இதேநிலை நீடித்தால், அந்நாட்டு அதிபர் தேர்தல் எப்படி நடக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க, மின்னஞ்சல் மூலம் ஓட்டுப்போடும் நடைமுறையை பின்பற்றலாம் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்துப் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படாது. திட்டமிட்டபடி நவம்பர் 3ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் நேரில் சென்று வாக்காளர் அடையாள அட்டையை காட்டி வாக்களிக்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் வாக்களிக்கும் நடைமுறையில் மோசடி செய்ய முடியும் என்பதால், அந்த நடைமுறை பின்பற்றப்படாது” என்றார் அமெரிக்க அதிபர்.