டில்லி

நாளை இரவு 9 மணிக்கு விளக்குகள் அணைப்பதால் வோல்டேஜ் பாதிக்காது எனவும் கம்ப்யூட்டர், ஃபேன், ஏசி போன்ற எதையும் அணைக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.அதில் நாட்டில் உள்ள அனைவரும் நாளை இரவு 9 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைத்து விட்டு தீபம், மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவை மட்டும் 9 நிமிடத்துக்கு ஏற்றி வைக்கக் கோரிகை விடுத்தார்.

ஏற்கனவே கடந்த 22 ஆம் தேதி நடந்த மக்கள் ஊரடங்கின் போது மக்கள் வெளியில் வந்து அனைவரும் ஒருங்கிணைந்து கை தட்டியது போல் இல்லாமல் தற்போது வீட்டுக்குள் சமுதாய இடைவெளியைப் பின்பற்றி தீபங்கள் ஏற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்வாறு ஒரே நேரத்தில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படுவதாலும்,  ஒன்பது நிமிடங்கள் கழித்து ஒரே நேரத்தில் அனைத்து விளக்குகளும் மீண்டும் எரிவதாலும் வோல்டேஜ் பாதிப்பு அடையும் என ஒரு தகவல் வந்தது.   மேலும்  இந்த வோல்டேஜ் பாதிப்பால் அனைத்து மின் உபகரணங்களும் பாதிப்படையும் என்பதால் முன் கூட்டியே அனைத்தையும் அணைத்து விட்டு தாமதாக மீண்டும் ஏற்ற வேண்டும் எனச் செய்திகள் பரவின.

இந்நிலையில் மத்திய மின் துறை அமைச்சகம் இன்று “அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்படுவதால் வோல்டேஜ் பாதிப்பு அடைந்து மின்சார உபகரணங்கள் பழுதடையும் என்பது தவறான கருத்தாகும்   இந்திய மின்சார கிரிட் மிகவும் வலிமையாகவும் சீராகவும் உள்ளது.  மின் தேவை மாறும் போது எவ்வித சேதமும் உண்டாகாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீட்டில் உள்ள விளக்குகளை மட்டுமே அணைக்க பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்  எனவே தெருவிளக்குகளை அணைக்க வேண்டாம்..  மேலும் நாளை இரவு 9 மணிக்கு முன்பே கம்பியூட்டர், ஃபேன், ஏசி போன்றவற்றை அணைக்க வேண்டாம். அவற்றுக்கு எவ்வித பாதிப்பும் உண்டாகாது.

அத்துடன் மருத்துவமனைகள், பொதுமக்கள் நடமாடும் இடங்கள், நகராட்சி நிலையங்கள், அலுவலகங்கள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அனைத்து விளக்குகளும் எரிய வேண்டும்.   அத்துடன் அனைத்து உள்ளாட்சி அமைப்புக்களும் அந்த வேளையில் மக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என அறிவித்துள்ளது.