டில்லி

கோவிட் 19 சோதனைக்காக எடுக்கப்படும் இரத்த மாதிரிகளைக் கவனத்துடன் கையாள வேண்டும் எனச் சோதனை நிலையங்களுக்கு ஐ சி எம் ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வரும் கோவிட் 19 தொற்றைக் கண்டறிய போதுமான சோதனை வசதிகள் இல்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன.   இந்த சோதனையை நடத்த இதுவரை 123 அரசு சோதனை நிலையங்களுக்கும் 49 தனியார் சோதனை நிலையங்களுக்கு ஐ சி எம் ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு அனுமதி அளித்துள்ளது.   இது குறித்து குழு சில எச்சரிக்கைகளை அளித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, “கோவிட் 19 மாதிரிகளைச் சோதனை செய்ய உயிரித் தொழில்நுட்பவியல் துறை, மற்றும் தொழில் நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழு, அணுசக்தித் துறை உள்ளிட்ட சோதனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை நிலையங்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டும்.  கோவிட் 19 என்பது ஒரு அபாயகரமான நோய்க்கிருமி வகையாகும்.  இந்த கிருமி அடுத்தவரைத் தொற்றும் தன்மை மற்றும் அதிவேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டதாகும்.

ஆதலால் இந்த மாதிரிகளை அதிக அளவில் அதுவும் பயிற்சி இல்லாத பணியாளர்கள் மூலம் கையாள்வதால் இவை  வெளியே பரவ வாய்ப்புகள் உள்ளன.  மேலும் சோதனை நிலையங்களில் இந்த பரவுதல் உண்டாகும் அபாயமும் உள்ளது.  இந்த மாதிரிகளைக் கவனத்துடன் கையாள்வது போன்ற பொறுப்புக்கள் அந்தந்த துறையை சார்ந்ததாகும்.  இந்த நிலையங்கள் விதிகளைப் பாதுகாப்புடன் செயல்படுத்த வேண்டும்” என எச்சரித்துள்ளது.