கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சிங்கப்பூரில் ஏப்ரல் 7-ம் தேதி முதல் 1 மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
சிங்கப்பூரில் 92 வயது மூதாட்டி உட்பட 74 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரமாக (1000) உயர்ந்து உள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று அதிகாலை 86 வயதான சிங்கப்பூர் பெண்மணி ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தாருக்கு தேசிய தொற்று நோய்கள் தடுப்பு நிலையம் தனிப்படுத்தலை அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கனவே மார்ச் 21ஆம் தேதி 75 வயது சிங்கப்பூர் பெண்மணியும் 64 வயது இந்தோனீசிய ஆடவரும் உயிரிழந்தனர். பின்னர் மார்ச் 29ஆம் தேதி 70 வயது சிங்கப்பூரரான சுங் ஆ லே உயிரிழந்தார். நேற்று உயிரிழந்த நான்காவது நபரான 68 வயது இந்தோனீசிய ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இன்று 86வயது பெண்மணி உயிரிழந்து உள்ளார்.
இந்த நிலையில் இன்று பிரதமர் லீ சியன் லூங், நாட்டு மக்களிடையே உரையாட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரதமரின் உரையை தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் வழியாகவும் பிரதமரின் ஃபேஸ்புக் பக்கம் வழியாகவும் மக்கள் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அங்கு ஏப்ரல் 7ந்தேதி முதல் இந்த மாதம் இறுதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, கடுமையான பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றை மூடுதல், சமயம் சார்ந்த கூட்டங்கள் மற்றும் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், வேலை மற்றும் பள்ளிகள் தவிர 10 பேருக்கு மேல் கூடாமல் இருத்தல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் படிப்படியாக அறிவித்து வந்தது
தற்போதைய நிலவரப்படி, இந்த ஊரடங்கு நடவடிக்கைகள் ஏப்ரல் 30 வரை நடப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.