ஐவர் அணி – இது வேற மாதிரி…
“எனக்குச் சின்ன வயசுல இருந்தே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக போராடணும், நாட்டுக்காக பாடுபடணும்னு ஆசை. அது நிறைவேறாமலே போய்விட்டது. ஆனா இப்பவும் நான் நம்ம நாட்டுக்கான சேவையை இதோ இந்த சேவையின் மூலமா பண்ணிட்டு இருக்கேன். இது எனக்கு ரொம்ப பெருமையாவும் இருக்கு…” என்கிறார் திரு.பிரதீப்.
அப்டி என்ன பண்றாருனு கேட்குறீங்களா… இவரும் இவரோட நண்பர்களும் சேர்ந்த ஐவர் குழு, வளசரவாக்கம் புனித ஜான்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போதிருந்தே இன்றும் ஒன்றாகவே வலம் வரும் அளவிற்கு நெருங்கிய நண்பர்கள். அது இன்று தேவையிலுள்ளோரை வலியத் தேடிச்சென்று உதவுவதிலும் தொடர்கிறது.
அது 2015 வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரழிவாக இருந்தாலும் சரி, இன்றைய கொரோனா தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்காக இருந்தாலும் சரி, இவர்கள் அங்கே நிச்சயமாக இருப்பார்கள், தேவையான உதவிகளுடன்.
பால் பிரதீப், சந்தோஷ் சுப்ரமணியன், பாசில், லட்சுமணன் மற்றும் மதிவாணன் எனும் இந்த ஐவர் அணியின் பணி சற்று வித்தியாசமானது. இது போன்ற நெருக்கடியான சூழல்களில் களத்தில் இருக்கும் அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து அவர்களின் மூலமாகவே பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான நிவாரண பொருட்களைச் சரியானபடி கொண்டு சேர்த்து உதவுகின்றனர்.
இவர்கள் தற்போதைய ஊரடங்கின் போது சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து சமூக சமையலறை ஒன்றை ஏற்படுத்தி உணவு தேவையிலிருக்கும் தன்னார்வலர்களுக்கு வழங்கி வருவதுடன், தனித்து விடப்பட்ட ஏழை எளியோருக்குத் தேவையான அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்களையும் கொடுப்பது என மிகப்பெரிய சேவைகளைச் செய்து வருகின்றனர்.
தொடக்கத்தில் வீடற்றோர், வயது முதிர்ந்தோர் எனத் தேடிச்சென்று தங்களது சொந்த செலவிலேயே வேண்டிய உதவிகளைச் செய்து வந்துள்ளனர். பின்னர் இந்த புகைப்படங்களை தங்களது சமூக தளங்களில் பகிர்ந்த போது, ஏராளமான உதவிகள் வந்து குவியத்தொடங்கின. இதனைக்கொண்டு தேவையிலுள்ளோரை அடையாளம் கண்டு மேலும் சிறந்த முறையில் உதவி வருகின்றனர் இவர்கள்.
இதுபோன்ற பேரழிவுகளின் போது இத்தகைய சேவைகளைச் செய்வது இந்த ஐவர் அணிக்குப் புதிது இல்லையென்றாலும் இந்த நோய்த் தொற்று என்பது இவர்களின் இந்த சேவைக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. இதனைக் கவனத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடனேயே தான் செல்கின்றனர் இவர்கள்.
“நாங்கள் பிரத்தியேக மாஸ்க் போன்ற பாதுகாப்பு உபகரணங்களுடன் தான் களத்தில் இறங்குகின்றோம்… ஏனெனில் இந்த விசயத்தில் நாங்கள் அலட்சியம் காட்டி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை” என்கிறார் பாசில்.
இவர்களின் இந்த சேவையின் ஒரு பகுதியாக ஐந்து நாட்களுக்கு முன் பாசிலும், பிரதீப்பும் வளசரவாக்கம் நகராட்சி அலுவலகம் சென்ற போது அங்கே, வடக்கிலிருந்து இங்கே குல்பி விற்க வந்த 22 வட மாநிலத்தவர்களைப் பார்த்துள்ளனர். இவர்கள் அனைவரும் சாப்பாட்டுக்கே வழியின்றி தங்களது மனைவி குழந்தைகளுடன் தவித்து வருவதைக்கண்டு உடனடியாக களத்தில் இறங்கியுள்ளனர்.
“இவர்கள் அனைவருமே உத்திரபிரதேசத்திலிருந்து வந்தவர்கள். வியாபாரம் ஏதுமில்லாததால், இவர்களின் முதலாளியும் கூட உதவிகள் ஏதும் செய்ய முடியாத சூழலில் தவித்துக் கிடந்தனர். இவர்கள் யாருக்கும் இந்தி தவிர வேறு எந்த மொழியும் தெரியாத சூழலில், உதவிக்கு யாரையும் அழைக்கக்கூட முடியாமல் செய்வதறியாது தவித்து நின்ற இவர்களுக்கு பத்து நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வந்தோம். மேலும் இது போன்று உண்ட வழியின்றி சிக்கித் தவிப்போரைத் தேடிச்சென்று உதவி வருகின்றோம்” என்கிறார் பிரதீப்.
யாராக இருந்தாலும் பசி என்பது தவிர்க்கவே முடியாத ஒரு பொதுவான விசயமாயிற்றே… எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து அதனைப் போக்கப் பாடுபட்டு சேவை செய்து வரும் இந்த ஐவர் அணி நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான்.
– ஏழுமலை வெங்கடேசன்