புதுடில்லி:
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள அவசர கால நிதியாக இந்தியாவிற்கு உலக வங்கி 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலக அளவில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவிற்கு கொத்து கொத்தாக மக்கள் மடிகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் 2000-த்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். கொரோனாவிற்கு எதிராக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது. இதையடுத்து கொரோனா பாதிப்பை சமாளிக்க உலக வங்கி இந்தியாவிற்கு அவசர கால நிதியாக 1 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கிழக்கு ஆசியாவில் மேலும் 1.10 கோடி(11 மில்லியன்) மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.