மும்பை

மும்பையில் தாராவி பகுதியில் கொரோனாவால் ஒருவர் மரணம் அடைந்ததால் அவர் இருந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.  இங்கு 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாநிலத்தில் அதிகம் பேர் ஒரே இடத்தில் வசிப்பதே இந்த கொரோனா பரவக் காரணம் எனக் கூறப்படுகிறது.   மும்பையில் பல இடங்களில் ஒரே இடத்தில் பலர் வசித்து வருகின்றனர்.  குறிப்பாக ஆசியாவின் மிகப் பெரிய குடிசை பகுதியான தாராவி இங்கு அமைந்துள்ளது.

தாராவி பகுதியில் சுமார் 5 சதுர கிமீ பகுதியில் லட்சக் கணக்கானோர் குடி இருக்கின்றனர்.  இங்கு தகரக் கொட்டகைகள், அழுக்கு சந்துகள், திறந்த கால்வாய்கள் எனச் சுகாதாரக் கேடு அதிகம் காணப்படுகிறது.  இந்த பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆனதால் அவர் சயான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் தனிமை சிகிச்சைக்கு அனுமதிக்க்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்   அவருடன் 7 பேர் வசித்து வந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.  அவர் இருந்த இடத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.  இன்று அவருடன் வசித்த 7 பேருக்கும் கொரோனா சோதனை நடைபெற உள்ளது.    தாராவி மக்களுக்கு கொரோனா மரணம் கடும் அச்சத்தை அளித்துள்ளது.