வாஷிங்டன்: உலகை ஆட்டுவித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றால், உலகப் பொருளாதாரம் தெளிவான மந்த நிலைக்கு சென்றுவிட்டதாக அறிவித்துள்ளது பன்னாட்டு நிதியம்.
இதுதொடர்பாக பன்னாட்டு நிதியம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது; நாம் இப்போது 2009ம் ஆண்டு காலகட்டத்தைப்போல் அல்லது அதைவிட மோசமான மந்த நிலைக்குள் சென்றுள்ளோம். இருப்பினும், அடுத்த ஆண்டில் பாதிப்பிலிருந்து மீள வாய்ப்புள்ளது. ஆனால், சர்வதேச அளவில் எல்லா இடங்களிலும் வைரஸைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும்.
உலகின் பிற முன்னேறிய பொருளாதாரங்களைப் போலவே, அமெரிக்காவும் மந்த நிலையில் உள்ளது. மேலும், வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரங்களிலும் ஒரு பெரிய தடை ஏற்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் மீதான இந்த திடீர் தாக்கத்தால் நிறுவனங்கள் திவாலாவதும், பணி நீக்கத்தில் இறங்குவதும் மிகவும் அபாயமானதாகும். இதன் தாக்கம், மீட்சியைப் பாதிக்கும். சமூகங்களின் பிணைப்பையும் பாதித்துவிடும்.
சமீப நாட்களில், பல்வேறு நாடுகள், நிதி சார்ந்த விஷயங்களில், அவர்களால் என்ன முடியுமோ, அந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எங்கள் உறுப்பினர்கள் மூலம் அறிகிறோம். கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட குறைவான வருமானம் கொண்ட நாடுகள், அவசரகால நிதியுதவி கேட்டு எங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளன. அவர்களுடைய இருப்பும் உள்நாட்டு வளமும் போதுமானதாக இல்லை என்ற நிலை உள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கைகளை நாங்கள் முன்வைப்போம். இந்த விஷயத்தில், நாங்கள் மிகவும் ஆதரவாக இருப்போம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.