டில்லி
கொரோனா பாதிப்பைப் போல் நாடெங்கும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
கொரோனா பாதிப்பால் நாடெங்கும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுனுள்ளேயே இருப்பதால் சாலைகள் வெறிச்சோடி போய் உள்ளது. மக்கள் நடமாட்டக் குறைவால் கொலை, கொள்ளை போன்ற குற்றவியல் நிகழ்வுகள் பெருமளவில் குறைந்துள்ளன. ஆனால் இதனால் மக்கள் நிம்மதி அடையாதபடி வேறுவகை குற்றங்கள் அதிகரித்துள்ளன.
ஊரடங்கு அமல்படுத்தபட்டதில் இருந்து ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுகின்றன. ஆன்லைனில் போலியான வணிகத்தளம், இ மெயில் போன்றவற்றை உருவாக்கி பலர் முக்கிய பொருட்களை விற்பதாகவும் மருந்து பொருட்கள் விநியோகம் செய்வதாக்வும் விளம்பரம் செய்கின்றனர். இதன் மூலம் மக்கள் பணத்தை மோசடி செய்யும் குற்றங்கள் நடைபெறுகின்றன.
காவல்துறையினர் இது குறித்து மக்கள் எச்சரிக்கையுடனிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் தொலைப்பேசி மூலம் ஒரு சிலர் தங்கள் உறவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்குச் சிகிச்சைக்குப் பண உதவி தேவை எனவும் போலியாக தெரிவித்து மோசடி செய்து வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
எனவே காவல்துறையினர் செய்ய வேண்டியவை,செய்யக்கூடாதவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதன் விவரம் பின் வருமாறு
சந்தேகத்துக்கு இடமான இமெயில் கணக்குகளைத் திறக்கக்கூடாது.
ஆதாரம் இல்லாத கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட இணைப்புகள் சமூக வலைத்தளத்தில் வந்தால் அதற்குள் செல்லக்கூடாது.
சமூக வலைத்தளம் மற்றும் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு மிகுந்த வலுவானதாக அமைத்து அதனுள் நுழைய ஓடிபி போன்று உறுதிப்படுத்தும் தன்மை இடம் பெற வேண்டும்.
கணினி மென்பொருளைக் குறிப்பாக ஆன்டிவைரஸ் மென்பொருளை அடிக்கடி மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆன்லைனை எப்படிப் பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்
எந்த ஒரு அறக்கட்டளைக்கும் பணம் செலுத்தும் முன் அதனுடைய அங்கீகாரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு பணம் செலுத்த வேண்டும்.
இவற்றையும் மீறி ஏமாற்றப்பட்டால் உடனடியாக போலீசில் புகார் கொடுக்க வேண்டும்.