பெர்லின்
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது மிகவும் சிக்கலாகி வருகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அந்நோயை கட்டுக்குள் வைத்து உலகிற்கு ஜெர்மனி வழிகாட்டுகிறது.
இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் அதிகளவில் நோய்த் தாக்குதலுக்கு உள்ளானோர் கண்டறியபட்டு அதிக உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் ஜெர்மனியில் 43938 பேருக்கு மேல் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பலி எண்ணிக்கை 267ஆக உள்ளது. 0.6 இறப்பு விகிதம் என்பது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜெர்மனி, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளை ஐனவரி மாத இறுதி முதலே மிகக் கவனமாக செய்யத் தொடங்கியது.
அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு குறித்த நாளில் சோதனைகளை செய்து முடித்தது. மார்ச் மாதத் தொடக்கத்திலேயே 167000 ஜெர்மானியரிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
Breaking the infection chain – கொரோனாத் தொற்றை கண்டுபிடித்து தனிமைப் படுத்துவதுடன், அவரோடு தொடர்பு உடையோரையும் உடனடியாகக் கண்டறிந்து தனிமைப் படுத்தியதால் நோய்த் தொற்றும் தொடர்புச் சங்கிலி அறுபட்டது.
பிற ஐரோப்பிய நாடுகளைப் போல் இல்லாமல் ஜெர்மன் மருத்துவத் துறைக்கு அதிக அதிகாரங்களையும் சலுகைகளையும் தொடக்கம் முதலே அளித்ததால், பல மாகாணங்களில் சூழலுக்கேற்ப அங்குள்ள ஆட்சியாளர்களால் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸைக் கண்டறிய நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகளை கையாளுதல். பிற நாடுகளில் சோதனை முடிவுகள் வெளிவர 3 நாட்களாக, ஜெர்மனியில் சில மணி நேரங்களில் தொற்றை உறுதி செய்யும் கருவிகள் இருப்பதும் கூடுதல் பயன் தருகிறது.
மேலும் இத்தாலியை ஒப்பிடுகையில் ஜெர்மானியரின் நடுத்தர வயதென்பது 48. இத்தாலியில் நடுத்தர வயது 63. அங்கு கொரோனாத் தொற்றால் பலியானோர் பெரும்பாலும் 65 வயதைக் கடந்தவர்கள்.
மொத்தத்தில் நுட்பமான முறைகளைக் கையாண்டு பெரும் உயிர்ச்சேதங்களை ஜெர்மனி தவிர்த்துள்ளது.