யாவத்மால்
தெலுங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெயினர் லாரிகளில் ஒளிந்து சென்ற 300 பேரை மகாராஷ்டிர காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
தேசிய ஊரடங்கை முன்னிட்டு மாநிலம் விட்டு மாநிலத்துக்குப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநில எல்லையிலும் காவல்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களைச் சோதித்து வருகின்றனர்.
நேற்று தெலுங்கானா – மகாராஷ்டிர மாநிலங்களில் எல்லையில் உள்ள யாவத்மால் பகுதியில் மகாராஷ்டிர மாநில காவல்துறையினர் சோதனை நடத்திய போது இரு கண்டெயினர் லாரிகளை பிடித்துள்ளனர். அதில் 300 தினக்கூலி தொழிலாளர்கள் ஒளிந்துக் கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் தங்கள் சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர்கள் கொரோனா பாதிப்பால் தாங்கள் பணி இழந்துள்ளதாகவும் அதனால் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பியும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் இவ்வாறு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். காவலர்கள் வாகன ஓட்டுநர்களைக் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர், “ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஆனால் வாழ்வாதாரத்தை இழந்ததால் சொந்த ஊருக்குத் திரும்பும் 300 தொழிலாளர்களை என்ன செய்வது என எங்களுக்குத் தெரியவில்லை. விரைவில் இது குறித்து ஒரு முடிவு எடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.