கொல்கத்தா:
கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார்.
பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி மக்கள் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை நடைமுறைப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக நாடுமுழுவதும் 80-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கரோனா தொற்று அதிகம் பரவும் பகுதியாக கண்டறியப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகளும் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
மேற்குவங்க மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு திடீரென சென்றார். அவருடன் அதிகாரிகளும் உடன் சென்றனர்.
கரோனா தடுப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அங்கு அவர் பார்வையிட்டார். மேலும் இதுதொடர்பாக மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.