டெல்லி: இந்தியாவில் 40,000 வென்டிலேட்டர்களே உள்ளன, கொரோனா தொற்று அதிகரித்தால் இவை போதுமானதாக இருக்காது என்று சுகாதார வல்லுநர்கள் கூறி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதே போன்ற நிலைமை தான் இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழி வகுத்தது.
கொரோனா வைரஸ் மக்களின் நுரையீரலை தாக்கி, சில சந்தர்ப்பங்களில் நிமோனியா உருவாக்கி சுவாசிக்கும் திறனை குறைக்கிறது. காற்றோட்டத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு குழாய் வழியாக நுரையீரலுக்கு காற்றை வழங்கும் வென்டிலேட்டர்கள், இந்த நோயாளிகளை உயிருடன் வைத்திருக்க முக்கியம்.
இந்தியன் சொசைட்டி ஆஃப் கிரிட்டிகல் கேர் நிறுவன தலைவர் டாக்டர் துருவா சவுத்ரி கூறுகையில், நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ள மருத்துவ சாதனமான வென்டிலேட்டர்களின் தோராயமான எண்ணிக்கை 40,000 ஆக இருக்கலாம்.
அவை பெரும்பாலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெருநகரங்கள், மாநில தலைநகரங்கள், மெட்ரோ நகரங்களில் தான் இருக்கும். ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத அளவு கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அவர்களுக்கான வென்டிலேட்டர் பயன்பாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் என்றார்.
பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 20% சதவீதம் வென்டிலேட்டர் கருவிகள் எங்களிடம் உள்ளது. சோதனையை விரிவுபடுத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களை விரைவில் அடையாளம் காண வேண்டும்.
மேலும் ஒரு முக்கியமான கட்டத்தில் அவர்களுக்கு திறம்பட சிகிச்சையளிக்க வேண்டும். எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்க்கும் நாங்கள் பின்பற்றிய அதே உத்தி இதுதான் என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் முன்னாள் சுகாதார செயலாளரும், இயக்குநருமான ஜெனரல் சுஜாதா ராவ் கூறி இருக்கிறார்.