முத்தாரம்மன் கோவில் மகிமை
ஆதிபராசக்தியின் வடிவமான முத்தாரம்மன் கோவில் குறித்த பதிவு
உலகம் அனைத்துக்கும் ஆதார சக்தியாகத் திகழ்பவள் ஆதிபராசக்தி.
ஆதிபராசக்தியிடமிருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். அன்னை ஆதிபராசக்தி உலக மக்களுக்கு அருள்புரிவதற்காகவே பல வடிவங்களும், பல பெயர்கள் கொண்டு கோயில் கொண்டிருக்கிறார். புண்ணிய பூமியான நம் நாட்டில் எண்ணற்ற அம்மன் திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன.
இதில் முத்தாரம்மன் வழிபட்டால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்…
இருப்பிடம் : தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அச்சங்குட்டம் கிராமம்
அகில உலகத்தையும் காத்தருளும் அம்மையான முத்தாரம்மா பல்வேறு தலங்களில் பலவிதங்களில் காட்சி கொடுக்கிறாள். அவ்வகையில் அச்சங்குட்டத்தில் கிராம தேவதையாக அரசாட்சி புரிந்து வருகிறாள்.
அன்னையின் ஆலயத்தை மனதால் வலம் வருவோம். அழகு தேவதையைக் காண வாருங்கள் என்று ஆலய தோரண வாயில் நம்மை அழகாக வரவேற்கிறது. உள்ளே நுழைந்த உடனே, ஆனைமுகன் அருட்காட்சி தருகிறார். அவரை அடுத்து நாக கன்னியம்மனின் திருக்காட்சி. அவளையும் தரிசனம் செய்து பிரகாரம் வலம் வந்து மகா மண்டபத்தை அடைந்து, பலி பீடத்தையும் கடந்து கருவறையை நோக்கினால், ஆயிரம் கோடி பிரகாசத்தை ஒத்தாற்போல் முத்தாரம்மனின் அழகு தரிசனம்.
“நான் இருக்கிறேன். எதற்கும் அஞ்சாதே !” என்று நம்மை ஆதரவு தந்து அபயம் அளிப்பது போல அம்மையின் திருமுகம் விளங்குகிறது. முத்தாரம்மன் வலக்கரத்தில் சூலம் ஏந்தி, இடக்கையில் குங்கும பொற்சுண்ணம் தாங்கி, பின்னிரு கரங்களிலும் நாக புரளும் உடுக்கை, நாக பாசம் தாங்கி வலக்காலை மடக்கி இடக்காலைத் தொங்க விட்டு அழகு திருக்காட்சி தருகிறாள்.
அச்சங்குட்டம் கிராமத்தை ஆட்சி செய்யும் ஸ்ரீ முத்தாரம்மன் வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். திருமணத் தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் வேண்டிய வரமெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.