பாரிஸ்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாய் வழி குழாய் மாத்திரைகளை ஐரோப்பா மருத்துவ நிறுவனம் உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மற்றும் தடுக்க எவ்வித மருந்தும் கண்டு பிடிக்கப்படாமல் உள்ளது. அமெரிக்க மருந்து நிறுவனம் ஒரு தடுப்பூசியைப் போட்டு மனித சோதனையைத் தொடங்கி உள்ளது. அதைத் தவிரக் கியூபாவில் மற்ற வைரங்களுக்கான மருந்தான ஆல்ஃபா 2 பி மருந்தைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தப் படுகிறது.
இந்நிலையில் ஐரோப்பிய மருந்து நிறுவனமான ஸ்டெபிலிடெக் பயோ பாரமா லிமிடெட் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளது. வாய்வழியாக உட்கொள்ளும் குழாய் மாத்திரையாக (கேப்சுல்) உருவாக்கப்பட்டுள்ள இந்த மருந்து சோதனை நடந்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மருந்து சோதனையில் வென்று அனுமதி பெற்றால் மிகவும் பாதுகாப்பான மருந்தாகவும் மக்கள் தாங்களாகவே உட்கொள்ளக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தாகவும் விளங்கும் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இந்த தடுப்பு மருந்து விலை மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் மக்களுக்கு மிகவும் பலனளிக்கும் எனவும் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இந்த மருந்தை குளிர்ந்த இடத்தில் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லாததால் ஆன்லைன் வர்த்தகர்களான அமேசான், அலிபாபா போன்றவை மூலம் விற்பனை நடத்த நிறுவனம் ஆலோசித்துள்ளதாக நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் மருந்துக் கடைகள் அதிகம் இல்லாத பகுதிகளிலும் ஆன்லைன் மூலம் இந்த மருந்து கிடைக்க வழிவகை செய்யப்படும் எனவும் அவர் கூறி உள்ளார்.