ஜெருசலேம்: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யகு என்று குற்றம்சாட்டுகின்றன அந்நாட்டு எதிர்க்கட்சிகள்.

இஸ்ரேலிலும் தற்போது கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்க வேண்டும், வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு தடை என்பதாக பல உத்தரவுகள் வெளியாகியுள்ளன. மேலும், அந்நாட்டு நாடாளுமன்றமும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாடாளுமன்ற முடக்கத்தைதான் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. மேலும், மக்களின் மொபைல் போன்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனெனில், நேதன்யகு அரசிற்கு பெரும்பான்மை இல்லை. இந்நிலையில், 61 உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட புளூ அன்ட் ஒயிட் கட்சித் தலைவர் பென்னி கான்டஸை ஆட்சியமைக்க வருமாறு அந்நாட்டு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இந்தச் சூழலில்தான் பிரதமரின் நாடாளுமன்ற முடக்க நடவடிக்கை கவனம் பெறுகிறது. தன்மீதான ஊழல் புகார் குறித்த விசாரணையை முடக்கி, ஆட்சியைத் தக்கவைக்கவே பிரதமர் இவ்வாறு செய்கிறார் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறப்படுகிறது.