டெல்லி:

காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் நள்ளிரவில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீது நள்ளிரவு பரபரப்பு விசாரணை நடைபெற்று, இறுதியில், அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு குற்றவாளிகள் தூக்கில் ஏற்றப்படுவது மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை கோரி இறுதியாக நேற்றும், நிர்பயா குற்றவாளிகள் தரப்பில் டெல்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, அது தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனு குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் ஏபி சிங் என்பவர், நள்ளிரவில் உச்ச நீதிமன்ற பதிவாளரின் வீட்டுக்கு சென்று மனு தாக்கல் செய்தார். இதையடுத்து வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

பவன் குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்றம் அதிகாலை 2.40 மணிக்கு விசாரிக்க தொடங்கியது. குற்றவாளிகள் தரப்பில் வழக்கறிஞர் ஏபி சிங் ஆஜராகி கடுமையான வாதங்களை முன் வைத்தார்.

அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷர் மேத்தா ஆஜரானார். தண்டனையை நிறைவேற்ற 3 மணி நேரமே இருந்த நிலையில் அனல்பறந்த வாதங்கள் நடைபெற்றது.

குற்றம் நடைபெற்றபோது, பவன் குப்தாவுக்கு வயது 18 ஆகவில்லை என்றும், இவர் இளம் குற்றவாளி என்பதை முன்னிறுத்தியே வாதங்கள் நடைபெற்றது. அதற்கான பள்ளிச்சான்றிதழ் போன்ற ஆவனங்கள் காட்டப்பட்டன.

ஆனால், இதை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதுபோன்ற வாதங்கள் ஏற்கனவே வாதிடப்பட்டது என்றும் தெரிவித்தனர்.

இறுதியாக  குறைந்த பட்சம் இரண்டு மூன்று நாள் தண்டனை நிறைவேற்றத்தை தள்ளி போட வேண்டும் என பவன்( குற்றவாளி) விரும்புகிறார் என்று வழக்கறிஞர் ஏ.பி.சிங் மீண்டும் முறையிட்டார்.

ஆனால், இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் பவனின் கருணை மனு நிராகரிப்பு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது உறுதியானது.

இதற்கிடையில், கடைசியாக குற்றவாளிகளை பார்க்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்க கோரி கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை அனுமதிக்கலாம் என மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தி கூறினார்.

அப்படி ஒரு வழக்கம் இல்லை என திகார் சிறை நிர்வாக ம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதையடுத்து அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

நள்ளிரவில் நடைபெற்ற இந்த வாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…