சென்னை
தமிழ்நாட்டில் மூன்றாம் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டு சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பல உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் வெளிநாட்டவர் ஆவார்கள். கொரோனா பாதிப்பால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதாவது டில்லி, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் தலா ஒருவர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மூவர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டுள்ளனர். அதில் முதலில் தாக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்துள்ளார்.
இன்று தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில், , “கடந்த 17 ஆம் தேதி அயர்லாந்தில் உள்ள டுப்லின் நகரில் இருந்து 21 வயதான இளைஞர் ஒருவர் சென்னைக்கு வந்தார். அவரை சோதித்ததில் நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. அவர் தற்போது சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட மூன்று கொரோனா நோயாளிகளுக்கும் வெளிநாட்டில் இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் கடுமையான சோதனைகள் காரணமாக இந்த மூவருக்கும் கொரோனா உள்ளது கண்டறியப்பட்டது. துறைமுகங்களிலும் சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மக்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம்” என பதிந்துள்ளார்.