சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். ஆனால், ஏராளமானோர் கொரோனா அறிகுறி காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , தமிழகத்தில் ஏற்கனவே 2 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , அயர்லாந்திலிருந்தில் இருந்து மார்ச் 17 ல் சென்னை வந்த மாணவர் வயது ( 21 ) கொரோனா அறிகுறியுடன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இதுமட்டுமின்றி, தென் மாவட்டங்களில் 73 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருச்சியில் மட்டும் 36 பேர் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்தும், சிங்கப்பூரில் இருந்தும் அடுத்தடுத்து விமானங்கள் வந்தன. சார்ஜாவில் இருந்து 150 பயணிகள், சிங்கப்பூரில் இருந்து 174 பயணிகள் வந்தனர். அனைவரையும் மருத்துவ குழுவினர் தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் பரிசோதனை செய்தனர். இதில் 27 பேருக்கு அதிக உடல் சூடு, சளி இருந்தது. இந்த 27 பேரில் 9 பேர் பெண்கள்.
இதையடுத்து 27 பேரும் தனி பஸ்சில் ராம்ஜிநகர் அடுத்த கள்ளிக்குடியில் மார்க்கெட்டுக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 27 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கொரோனா அறிகுறியுடன், சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடியில் நரிக்குறவர் காலனி உள்ளது. இந்த காலனிக்கு கேரளாவில் இருந்து நரிக்குறவர்கள் 28 பேர் கடந்த 16ம் தேதி ரயில் மூலம் வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதால், 14 நாட்களுக்கு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தினர். 28 பேரில் யாருக்காவது காய்ச்சல், சளி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேர், கள்ளிக்குடி சிறப்பு மையத்தில் 27 பேர் என மொத்தம் 36 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தென் மாவட்டங்கள் மதுரை, கீழக்கரை, காரைக்குடி மற்றும் மூணாறு பகுதிகளை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
நேற்று துபாயிலிருந்து கீழக்கரை திரும்பிய 35 வயதை சேர்ந்த ஒருவர் உடல் நலமின்றி காணப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த 24 வயதான வாலிபர், நேற்று மாலை துபாயி லிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் அவருக்கு, கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இருந்தது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு முகக்கவசம் மற்றும் தனி உடை அணிவித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
நெல்லையில் கரோனா அறிகுறியுடன் 8 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்; இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பியதால் 30 பேர் அவர்தம் வீடுகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
கொரோனா தமிழகத்தில் அதிகரித்து வருவதை இந்த தகவல்கள் உறுதி செய்கின்றன…