சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான சிகிச்சை தமிழக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெறலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், திமுக எம்எல்ஏவுமான துரைமுருகன், கொரோனா அச்சம் காரணமாக, தனியார் மருத்துவமனைக்கு சென்றால், அங்கு நோயாளிகளிடம் 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. அதனால், இந்த நோயையும், அரசு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க அரசு முன்வருமா? என கேள்வி விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர், கொரோனா சிகிச்சைக்கு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு வழிவகை செய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட இரண்டாவது நபருக்கு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்த 10 நபர்களை கண்டுபிடித்து அவர்களை கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 32 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் யாருக்கும் தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், குறைவான பரிசோதனையே அரசு மருத்துவமனைகளில் மட்டும் மேற்கொள்ளப்படுகிறது.
அதனால், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்க வாய்ப்பில்லை என்றார். அதேபோல அரசு மருத்துவமனைகளில் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. மேலும், தனியார் மருத்துவமனைகளில் தரமான ஆய்வகம் வைத்திருப்பவர்கள் அரசை அணுகினால், அங்கு கொரோனா ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறோம் என்றார்.
இந்த சிகிச்சைக்கு அரசு காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கு வழிவகை செய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.