யூ டியூப் சேனல் ஒன்றின் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதன் சிறப்பு விருந்தினர்- ரஜினிகாந்த்.

கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, ‘தமிழ்நாட்டில் மக்கள் புரட்சி ஏற்பட்டால் உடனடியாக அரசியலுக்கு வருவேன்’’ என்று பிரகடனம் செய்தார்.

மக்கள் புரட்சியை ஏற்படுத்தும் பொறுப்பை ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடம் ஒப்படைத்தார்.
இரு தினங்களுக்கு பிறகு தனது போயஸ்கார்டன் வீட்டு வாசலில் காத்திருந்த செய்தியாளர் களிடம் ‘’ உங்களை போலவே மக்கள் புரட்சிக்கு காத்திருக்கிறேன்’’ என்று ஒற்றை வரியில் பதில் கொடுத்து விட்டு சென்றார்.

இந்த நிலையில் நேற்று நடந்த விழாவில், தனது புரட்சி கருத்துக்கு மக்கள் ஆதரவு எப்படி உள்ளது என்பது குறித்து விளக்கமாகவே பேசினார்.
அதன் சுருக்கம்:
‘’அரசியலுக்கு வருவதற்கு நேரம் ரொம்ப முக்கியம். கொஞ்ச நாளைக்கு முன்பு அரசியல் தொடர்பாக ஒரு புள்ளி போட்டேன். புது புள்ளி. அது- அமைதியாக , யாருக்கும் தெரியாம ஒரு சுழலை உருவாக்கியுள்ளது.

அதை அலையா மாத்தணும்.வலுவான அலையா மாத்தணும். அதுக்கு ரஜினி போகணும். ரஜினி ரசிகர்கள் போகணும்.

ஏன்னா கடல் மத்தியில –மக்கள் கடல் மத்தியில இந்த அலை உருவாகணும்.

இந்த அலை கரையை நெருங்க நெருங்க- தேர்தல் நேரத்தில் அரசியல் சுனாமியா மாறும் .அது ஆண்டவன் கையில் உள்ளது.ஆண்டவனாகி மக்கள் கையில்- உங்கள் கையில் உள்ளது. நீங்கதான் அத உருவாக்கணும்.

அதன் பிறகு தமிழ்நாட்டில் அற்புதங்கள் ஏற்படும்.அதிசயங்கள் ஏற்படும்’’ என்று பலத்த கர ஒலியோடு பேச்சை முடித்தார், ரஜினி.

‘அண்ணாத்த’ நேற்று ‘அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்திருக்க வேண்டும், கொரோனாவால் படப்பிடிப்பு கேன்சல் ஆனதால் சேனல் விழாவில் பங்கேற்றுள்ளார்.