சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் வரும் 31ம் தேதி வரை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 6000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பால் பலியாகி இருக்கின்றனர். அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 3வது முறையாக ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், மார்ச் 31ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் பார்களையும் மூட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31ம் தேதி வரை மூட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகளவில் கூட வேண்டாம், திருமண நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.