டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் 50க்கும் அதிகமானோர் கூட தடை விதித்து முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. 157 நாடுகளில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக, இதுவரை 6,516 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்து 69 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
சீனாவை தொடர்ந்து இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருகிறது.
கேரளா மாநிலத்தில்தான் முதன்முதலில் இந்த பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களில் கொரோனா தாக்குதல் ஏற்பட்டது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.
தலைநகர் டெல்லியிலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நைட் கிளப்புகள், உடற்பயிற்சி கூடங்கள் மார்ச் 31-ம்தேதி வரை அடைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுமான வரை திருமண நிகழ்ச்சிகளை ஒத்தி வைக்குமாறு டெல்லி மக்களை முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
50 பேருக்கும் அதிகமானோர் கூடும் அனைத்து மத, சமூக, கலாச்சார நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளை அவரவர் விருப்பத்துக்கு ஏற்க ஒத்தி வைத்துக் கொள்ளலாம்.
கட்டாய மருத்துவ முகாமுக்காக 3 தனியார் ஓட்டல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனை பணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.