விருதுநகர்: என்ஆர்சிக்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? என்று சரமாரி கேள்விளை எழுப்பி அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜூ ஆகியோரை அதிர வைத்திருக்கிறார் ஒரு பெண்மணி.

விருதுநகரில் கூட்டுறவு துறை சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய தொடக்க விழா நடைபெற்றது. கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு, விற்பனையை தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து விழா மேடையில் கூட்டுறவு துறை சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்பொழுது கூட்டுறவு வங்கி கடனாக ரூபாய் 8 லட்சம் பெற மேடைக்கு வந்தார் கூட்டுறவு சங்கத் தலைவி முகமது கிலோ பார் பாத்திமா.

அப்போது என்.ஆர்.சி.க்கு ஆதரவாக ஏன் வாக்களித்தீர்கள், இஸ்லாமியர்கள் வாக்களிக்க வில்லை என்றால் நீங்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? இந்த நிகழ்ச்சியில் என்ஆர்சி பற்றி ஏன் பேசவில்லை என்று அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி ஆகியோரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர்கள் இருவரும் அமைதியாக இருக்குமாறும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பதிலளித்தனர். இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.