டில்லி
இந்திய மொபைல் இணையக் கட்டணங்கள் 5 முதல் 10 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொபைல் மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து தற்போது இந்த வசதியைப் பயன்படுத்தாதோர் மிகவும் குறைந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் ஜியோ வந்த பிறகு மொபைல் இணையக் கட்டணங்களைக் குறைக்கப்பட்டது ஆகும். போட்டி காரணமாக மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கட்டணங்களைக் குறைத்தன.
உலகிலேயே மிகவும் குறைவான கட்டணத்தில் மொபைல் மூலம் இணைய வசதி இந்தியாவில் அளிக்கப்படுகிறது. அதிக பட்சமாக ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ.3.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதாவது ரூ.599க்கு 84 நாட்களுக்குத் தினமும் 2 ஜிபி என்னும் கணக்கில் இணையச் சேவை வழங்கப்படுகிறது. இந்த குறைந்த கட்டணம் காரணமாக ஏர்செல் போன்ற நிறுவனங்கள் மூடப்பட்டன.
கடும் கடன் தொல்லையில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா நிறுவனம் அடிப்படை கட்டணங்களை ஒரு ஜிபிக்கு ரூ.35 என அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. மற்றொரு தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ஒரு ஜிபிக்கு ரூ.30 எனக் கட்டண உயர்வையும், ரிலையன்ஸ் ஜியோ ஒரு ஜிபிக்கு ரூ.20 என அதிகரிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளன.
தற்போதைய நிலையில் அடிப்படை கட்டணங்களைத் தொலைத் தொடர்பு நிறுவனங்களே நிர்ணயம் செய்கின்றன. இதைத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறைஆணயம் நிர்ணயம் செய்யவேண்டும் என நிதிஅயோக் தெரிவித்துள்ளது. தற்போது தொலை தொடர்பு நிறுவனங்கள் கடும் கடன் சுமையால் தத்தளிப்பதால் இந்த யோசனைகளை நிதி அயோக் தெரிவித்துள்ளது.
இது குறித்து தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கலந்தாய்வு செய்து வருகிறது. ஆணையம் தொலை தொடர்பு நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டால் ஒரு ஜிபிக்கான கட்டணம் ரூ.20 முதல் ரூ.35 வரை இருக்கும். அது தற்போதைய கட்டணத்தைப் போல் 5 முதல் 10 மடங்கு அதிகம் ஆகும். இந்த தகவல்களால் தற்போது குறைந்த கட்டணத்தில் சேவை பெறும் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பாதிப்பு அடைவது உறுதி ஆகும்.