சென்னை

அதிமுக கூட்டணியில் தேமுதிக நிலை என்ன?

தமிழ்நாட்டில் ஆறு ராஜ்யசபா எம்.பி.இடங்கள் காலியாகிறது.

தி.மு.க. கூட்டணி மூன்று இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி மூன்று இடங்களிலும் வெற்றி பெற முடியும்.

இரு கூட்டணிகளிலும் எம்.பி.பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

சொந்த கட்சிக்காரர்கள் தவிர கூட்டணி கட்சிகளும் , மல்லுக்கு நின்றன.

மூன்று இடங்களையும் தானே எடுத்துக்கொண்டது, தி.மு.க.

அ.தி.மு.க. இரு இடங்களை தான் வைத்துக்கொண்டு, இரு இடத்தை கூட்டணி கட்சியான த.மா.கா.வுக்கு தாரை வார்த்துள்ளது. அந்த கட்சியின் சார்பில் அதன் தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார்.

மூன்றாவது இடத்துக்கு அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க கடுமையாக மோதி பார்த்தது.

அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மச்சானுமான எல்.கே.சுதீஷ், நேரிலேயே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, ராஜ்யசபா சீட் தாருங்கள் என்று மன்றாடினார்.

பா.ஜ.க.வின் டெல்லி மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக வாசனுக்கு பம்பர் பரிசு கிடைத்ததாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

தங்களுக்கு சீட் கிடைக்காததால் நொந்து நூலாகி விட்டார், எல்.கே.சுதீஷ்..

‘’எங்களுக்கு சீட் கொடுக்காததால் ஏமாற்றம் அடைந்து உள்ளோம். வேறு எதுவும் கேட்காதீர்கள்’’ என்று செய்தியாளர் ஒருவரிடம் ஆதங்கப்பட்டுள்ளார், சதீஷ்.

அ.தி.மு.க.கூட்டணியில் தே.மு.தி.க. நீடிக்குமா?

சதீஷ் இதற்கு பதில் சொல்லவில்லை.

வேறு ஒரு மூத்த தலைவர் சொன்ன பதில் இது:

‘’ சீட் கொடுக்காததால் அ.தி.மு.க.வுடனான எங்கள் (தே.மு.தி.க) உறவு பாதிக்கப்படாது என்றே நினைக்கிறேன். எனினும் இறுதி முடிவை கட்சி மேலிடமே எடுக்கும்’’ என்கிறார் அவர்.