சென்னை:
எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது வெறும் கண்துடைப்புக்கான அறிவிப்பு என்று அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.
ஜெ.மறைவை தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அதிமுக 2ஆக உடைந்தது. சசிகலா முதல்வராக விரும்பியதைத் தொடர்ந்து, அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, முதல்வராக இருந்த ஓபிஎஸ்-ஐ பதவியை ராஜினாமா செய்ய சசிகலா குடும்பத்தினர் மிரட்டினர். இதனால், பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்த ஒபிஎஸ், ஜெ. சமாதியில் அமர்ந்து தியானம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது. தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேர்ந்த நிலையில், அவரது ஆதரவுடன் எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. தொடர்ந்து, எடப்பாடி அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரிய போது, கட்சி கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல் ஏக்கள் 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதற்கிடையில், உடைந்த அதிமுக இணைந்து, ஓபிஎஸ் துணைமுதல்வராக பதவி ஏற்றார். அவரது ஆதரவாளர்கள் சிலருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஓபிஎஸ் உள்பட 11 பேரையும் கட்சித்தாவல் சட்டப்படி அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஆனால், சபாநாயகர் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து, ஓபிஎஸ் உள்பட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. தீர்ப்பை எதிர்த்து டிடிவி மற்றும் திமுக சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், 2 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த மாதம் (பிப்ரவரி 14ந்தேதி) தீர்ப்பு கூறியது. அதில், சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அதற்கான காலக்கெடுவும் கொடுக்க முடியாது, சபாநாயகர் விரைவில் முடிவு எடுப்பார் என நம்புவதாகவும் என கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது,
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையில், ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு ஓபிஎஸ் அணி தரப்பில் விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என்றும், அதை ஏற்று சபாநாயகர் தீர்ப்பு கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், சபாநாயகரின் தீர்ப்பு அதிமுக அரசுக்கு ஆதரவாகவே இருக்கும் என்றும், கண்துடைப்புக்காகவே சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.