டில்லி
மத்திய அரசு டில்லி கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த ஏன் தயங்குகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கேள்வி கேட்டுள்ளார்.
தற்போது நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் 2 ஆம் அமர்வு நடந்து வருகிறது. டில்லி கலவரம் குறித்து இந்த அமர்வில் விவாதிக்க வேண்டும் என அமர்வு தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சியினர் கேட்டு வருகின்றனர். ஆனால் மத்திய அரசு விவாதம் நடத்தாமல் உள்ள்து. இதனால் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன் தினம் மக்களவையில் 7 காங்கிரஸ் உறுப்பினர்கள் இது குறித்து கோரிக்கை விடுத்த போது மீண்டும் அமளி ஏற்பட்டது. அப்போது இவர்கள் சபாநாயகர் இருக்கைக்குச் சென்று காகிதங்களைப் பறித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதையொட்டி இந்த 7 பேரும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக நாடாளுமன்றத்தில் எவ்வித அலுவல்களும் நடைபெறவில்லை. இந்நிலையில் ஹோலிக்கு பிறகு வரும் 11 ஆம் தேதி அன்று மிண்டும் அவை கூடும் போது டில்லி கலவரம் குறித்து விவாதம் நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா விவாதத்தைத் தள்ளிப் போட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ப சிதம்பரம், “டில்லி கலவரம் தொடர்பாக நாடாளுமன்ற தொடர் கூடிய உடனேயே விவாதித்திருக்க வேண்டும். மத்திய அரசு தற்கு ஏனோ முன் வரவில்லை. இந்த கவலரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு ஏன் தயங்குகிறது? உலகின் பல்வேறு நாடுகளிலும் நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகளும் விவாதிக்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.