டெல்லி:

7 காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெறுங்கள் என்று மக்களவை சபாநாயகருக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த தொடரில், டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதை சபாநாயகர் ஏற்க மறுத்துள்ள நிலையில், சபையில் எதிர்க்கட்சியினர் அமளி ஏற்படுத்தி முடக்கி வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள், சபாநாயகர் மேஜையின் மீது இருந்த பேப்பரை பிடுங்கி கிழித்து எறிந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அமளியில் ஈடுபட்ட 7 எம்.பி.க்களையும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை அருகே காங்கிரஸ் எம்.பி. ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இன்றைய சபை நடவடிக்கையும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் மதியம் 12 மணி அளவில் மீண்டும் கூடியது., சபை நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்  7 பேர் மீதான சஸ்பெண்டு உத்தரவை திரும்பெறும்படி சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி,  சுதீப் பாண்டியோபாத்யாய் (டிஎம்சி), தயாநிதி மாறன் (திமுக) மற்றும் சுப்ரியா சூலே (என்சிபி) ஆகிய எம்.பி.க்கள்,  7 காங்கிரஸ் எம்பிக்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை “விகிதாசாரமற்றது” என்பதால் ஏழு உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கான முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் எம்.பி.க்களை இந்த தொடரில் பங்கேற்கும் வகையில், இடைநீக்கம் செய்ததற்கான முடிவை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.