சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சிவகுரு பிரபாகரன் தனது திருமணத்திற்கு கேட்ட வரதட்சணையை கண்டு பல பெண்கள் ஓட்டம் பிடித்த வேளையில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணபாரதி அதற்கு சம்மதித்து மகிழ்ச்சியுடன் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார்.
பேராவூரணிக்கு அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல சிரமங்களுக்கு இடையே ஐஏஎஸ் அதிகாரியானவர் சிவகுரு பிரபாகரன். ஒரு மருத்துவரைத் தான் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதை மனதில் கொண்டு அவருடைய பெற்றோர்கள் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்தனர். இந் நிலையில், மருத்துவம் படித்த பல பெண்கள் இவருடைய நிபந்தனைகளை கேட்டு ஓட்டம் பிடித்தனர்.
கடைசியாக சென்னை நந்தனம் கல்லூரியில் கணித பேராசிரியரின் மகளும், மருத்துவருமான கிருஷ்ணபாரதி, திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களின் திருமணம் நடைபெற்றது.
தம்மை திருமணம் செய்து கொள்ளும் மருத்துவர் வாரத்தில் 2 நாட்கள், தமது சொந்த கிராமமான ஒட்டங்காடு மற்றும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே ஆட்சியரின் நிபந்தனை. இது தான் அவர் வரதட்சணை.
நெல்லையில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவை சீரோடும், சிறப்போடும் நடத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சிவகுரு பிரபாகரன் என்பது குறிப்பிடத்தக்கது.