பழனி: மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக தேமுதிகவுடன் எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான வைகை செல்வன் கூறி இருக்கிறார்.

பழனியில் அதிமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எந்தவிதமான தெளிவான விளக்கங்களையும் அவர் சொல்லவில்லை.

அவரது கருத்துக்கள் சில சமயங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், பல சமயங்களில் நிராகரிக்கப்படக்கூடியதாகவும். கேலிக்கூத்தாகவும் இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தையின்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக எந்தவிதமான உடன்படிக்கையும் தேமுதிகவுடன் செய்து கொள்ளவில்லை. பாமகவுடன் மட்டும் தான் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.

ஆனால் இப்போது தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கின்றனர். அதிமுகவிலேயே மூத்த உறுப்பினர்கள் பலர் இருக்கின்றனர். எனவே இது தொடர்பான இறுதி முடிவு கட்சி தலைமை தான் எடுக்கும் என்றார்.