சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சிப்பெற்று டிஎஸ்பி அந்தஸ்தில் பணியாற்றுபவருக்கு, துணை ஆட்சியர் பதவியை உருவாக்கி நியமனம் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
ஏ.பாபு பிரசாத் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம். கடந்த 2012-13ம் ஆண்டில் நடைபெற்ற குரூப்-1 தேர்வில் தேர்ச்சிபெற்று டிஎஸ்பி -யாக பணியாற்றி வருகிறார். பின்னர், துணை ஆட்சியருக்கான தேர்வில் கலந்துகொண்டு தேர்வெழுதினார்.
ஆனால், தேர்வின்போது தவறானப் பக்கத்தில் எழுதிய விடைகளை அடித்து, அந்தப் பக்கத்தில் கையெழுத்திடுமாறு தேர்வு அறை கண்காணிப்பாளர் வற்புறுத்தியதால் கையெழுத்திட்டதால், இவர் தேர்ச்சிபெற்றோர் பட்டியலில் இடம்பெறவில்லை.
எனவே, இதைத்தொடர்ந்து பாபு பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டதாவது, “குரூப்-1 தேர்வெழுதிய மனுதாரர், இரண்டு முறையும் டிஎஸ்பி பணிக்குத் தேர்வாகியுள்ளார்.
துணை ஆட்சியராகும் குறிக்கோளில், மீண்டும் தேர்வெழுதியுள்ளார். இரண்டு தாள்களில் 400க்கு 575 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மூன்றாவது விடைத்தாளில் அவரது அடையாளத்தைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. தேர்வாணையம் நியாயமான முடிவை எடுத்திருக்க வேண்டும்.
தற்சமயம், 29 துணை ஆட்சியர் பதவிகள் நிரப்பப்பட்டு விட்டன. மூன்றாவது விடைத்தாளில் போதிய மதிப்பெண் பெற்று, நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றால், கூடுதல் பணியிடத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை அரசு பார்க்க வேண்டும்.
திறமையான மற்றும் தகுதியான நபரை, அரசு இழக்கக்கூடாது. எனவே, ஒரு இடத்தை உருவாக்க முடியும் வாய்ப்பிருந்தால், மூன்றாம் விடைத்தாளை மதிப்பீடு செய்து, அதில் தகுதி பெற்றால், நேர்முகத் தேர்வுக்குப்பின் துணை ஆட்சியர் பதவியை வழங்கலாம். அரசிடம் இருந்து உத்தரவைப் பெற்று இந்த நடைமுறையை நான்கு வாரங்களில் முடிக்க வேண்டும். ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது; இந்தக் குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டுமே பொருந்தும்” என்றுள்ளது.