திஸ்பூர்: அசாமில் உள்ள 614 மதரசாக்கள், 101 சமஸ்கிருதம் பயிற்சி மையங்கள் 6 மாதங்களில் மூடப்படுகிறது.
இந்த அறிவிப்பை மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
மதம், வேதம், அரபி மொழி போன்றவற்றை சொல்லி கொடுப்பது மதச்சார்பற்ற அரசின் வேலை கிடையாது. மாநில அரசு கட்டுப்பாட்டில் 614 மதரசாக்கள், 101 சமஸ்கிருதம் பயிற்சி மையங்கள் இருக்கின்றன.
அவை கட்டுப்பாடுகள் இல்லாமல் செயல்படுகின்றன. அந்த மையங்கள் மெட்ரிக்குலேசன் அல்லது மேல்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு இணையான சான்றிதழை அளிக்கின்றன.
அதானல் பெரும் குழப்பம் தான் ஏற்படுகிறது. ஆகையால், மதரசாக்களையும், சமஸ்கிருதம் பயிற்சி மையங்களை சாதாரணமான பள்ளிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 2 ஆயிரம் தனியார் மதரசாக்களை நெறிப்படுத்த வழிமுறைகள் வகுக்கப்படும்.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தான் மதரசாக்கள் மற்றும் பயற்சி மையங்களில் சேர்க்கின்றனர். அதன் காரணமாக முறையாக கல்வி அவர்களுக்கு இல்லாமல் போகிறது என்றார்.
ஆனால் இந்த அறிவிப்பு பற்றி எதுவும் தகவல்கள் இல்லை என்று மதரசா கல்வி வாரியம் கூறி இருக்கிறது. இது குறித்து அசாமின் மாநில மதரசா கல்வி வாரியத்தின் தலைவர் இம்ரான் உசேன் கூறியதாவது:
இந்த அறிவிப்பு தொடர்பாக எங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. இந்த வளர்ச்சியைப் பற்றி ஊடக அறிக்கைகள் மூலம் அறிந்து கொண்டோம் என்றார்.