கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்வியறிவு இல்லாத சாலையோர ஆரஞ்சுபழ வியாபாரிக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மகிழ்ச்சியை அளித்துள்ள நிலையில், அவருக்கு எதற்காக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதை காணலாம்….
இந்திய அரசு 1954ஆம் ஆண்டிலிருந்து தம் குடிமக்களில் பெரும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கி வருகிறது. அதுதான் இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் உயரிய விருது. அதற்கு அடுத்த நிலையிலான விருதுகள் பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ ஆகியவை. இவற்றை பத்ம விருதுகள் என்று சொல்வது வழக்கம். இவை குடிமுறை சார்ந்தவர்களுக்கான விருதுகள். அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், இசை, நடனம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி இந்த ஆண்டுக்கான (2020) பத்ம விருதுகள் ஜனவரி 26ந்தேதி அன்று அறிவிக்கப்பட்டது. இதில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாலையோர வியாபாரி ஹஜப்பா என்பவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது…. சாலையில் ஓடும் வண்டிகளிடையேயும், பொதுமக்களிடையேயும் ஆரஞ்சு பழத்தை கையில் வைத்துக்கொண்டு கூவி கூவி விற்கும் படிப்பறிவு இல்லாத சாதாரண சாலையோர வியாபாரிக்கு, அவர் செய்து வரும் கல்விப்பணியை பாராட்டி மத்தியஅரசு பத்மஸ்ரீ விருது அறிவித்து கவுரவித்து உள்ளது.
தட்சிண கன்னடா பகுதியைச் சேர்ந்தவரான ஹரேகலா ஹஜப்பா. சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவர். குடிசை வீட்டில் வசித்து வரும் இவர் செய்து வரும் பணிகளோ… கோபுரத்திற்கும் அதிகமானது…
கடந்த ஜனவரி மாதம் 25ந்தேதி அன்று ரேஷன் கடையில் அரசு வழங்கும் இலவச அரிசியை வாங்கிக்கொண்டிருந்த ஹஜப்பாவின் மொபைலுக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர், இந்தியவில் பேச, அவருக்கு இந்தி தெரியாத நிலையில், அருகிலுள்ள ஆட்டோ ஓட்டுனரிடம், பேசுவது யார் என்று கேட்டு தெரிவிக்கும்படி, ஹஜப்பா கூறியிருக்கிறார். அவருக்கும் இந்திய தெரியாத நிலையில், அவர் கூறிய பத்மஸ்ரீ அவார்டு என்ற வார்த்தை மட்டும் எதையோ உணர்ச்சி உள்ளது. இதுகுறித்து ஹஜப்பாவிடம் தெரிவிக்க அவரோ, அதை கண்டுகொள்ளாமல், தனது வியாபாரத்தை முடித்துவிட்டு மாலை வீட்டுக்கு சென்றார்.
அங்கு அவருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் காத்திருந்தது. அந்த பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், ஹஜப்பா பெயர் பத்மஸ்ரீ அவார்டு தேர்வு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டு உள்ள தகவலை தெரிவித்து, வாழ்த்து தெரிவிக்க, இந்த செய்தி காட்டுத்தீயாக பரவியது…. அவருக்கு லோக்கல் பிரமுகர்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்களும் நேரிலும், போனிலும் வாழ்க்கள் கூற, திக்குமுக்காடிப்போனார் ஹஜப்பா.
ஹஜப்பாவுக்கு ஏன் பத்மஸ்ரீ விருது?
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா பகுதியில் உள்ள நியூ படப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரேகலா ஹஜப்பா. பள்ளியே இல்லாத கிராமத்தைச் சேர்ந்தவரான இவரது தொழில் சாலையோரத்தில் ஆரஞ்சு பழம் விற்பனை செய்து வருவது. அதில் கிடைக்கும் வருமானத்தில் காலத்தை ஓட்டி வருகிறார்.
இவர் ஒருமுறை, சாலையில் சென்ற வாகனத்தில் சென்ற வெளிநாடு நபரிடம் ஆரஞ்சு பழம் விற்பனை செய்ய முயல, அதில் இருந்து பெண், விலை எவ்வளவு என்று ஆங்கிலத்தில் கேட்க, அது புரியாததால், வியாபாரம் செய்ய முடியாத நிலையை எண்ணி வருந்தினார்.
தனக்கு படிப்பறிவு இல்லாததால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து வருந்திய ஹஜப்பா, இனிமேல் நமது பகுதியில் ஒருவரும் படிப்படிப்பு இல்லாமல் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்து, அதற்கான பணிகளை முன்னெடுத்தார்.
அவரது தீவிர முயற்சி காரணமாக பள்ளிக்கூடமே இல்லாத இந்தக் கிராமத்தில் உள்ள ஏழைக்குழந்தைகள் படிப்புக்காக 1999-ம் ஆண்டு முதன் முதலாக ஆரம்பப் பள்ளி ஒன்றை தொடங்கினார்.
புதியதாக தொடங்கப்பட்ட இந்த தொடக்கத்தில் 28 மாணவர்கள் படித்தார்கள். தொடர்ந்து ஹஜப்பா மேற்கொண்ட முயற்சி மற்றும் தனது சொற்ப வருமானம், மற்றும் கடன்கள் மூலம் பள்ளிக்காக தனியாக ஒரு இடத்தை வாங்கி பள்ளிக்கூடம் கட்டுவதற்கான முயற்சியை 2000மாவது ஆணடில் தொடங்கினார். அப்போது தன்னிடம் ரூ.5 ஆயிரம் மட்டுமே இருந்தாக கூறும் ஹஜப்பா, அரசின் நிதி உதவி மற்றும் , கிராமத்தில் பல நன்கொடையாளர்கள் கொடுத்த பணத்தின் மூலமும் சிறியதாக ஒரு பள்ளியைக் கட்டினார்.
இதுமட்டுமின்றி,வியாபரம் தவிர்த்து மற்ற நேரங்களில், பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்துவது, மாணவர்கள் குடிக்கத் தண்ணீர் ஏற்பாடுசெய்வது, கல்வி வசதிகளை மேம்படுத்தத் தொடர்ந்து, பள்ளி வளர்ச்சிக்கான பணிகள் மற்றும் கல்வி அதிகாரிகளிடம் பேசுவது என கல்விக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வருகிறார்…
இந்த பள்ளி இன்று 10ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கும் மிகப்பெரிய அரசாங்கப் பள்ளியாக உருவெடுத்து உள்ளது…
தற்போது 60வயதை எட்டியுள்ள ஹஜப்பாவின் கல்விப்பணிக்காக 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விருது குறித்து தெரிவித்துள்ள ஹஜப்பா, தனக்கு இந்த விருதை மத்தியஅரசு வழங்கியுள்ள மகிழ்ச்சியை தருகிறது என்றவர், ஏற்கனவே “கடந்த 2014-ஆம் ஆண்டு, காவல்துறை துணை ஆணையர் ஏ.பி.இப்ராஹிம் என்பவர், இந்த விருக்காக என பெயரை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். ஆனால், நான் அதை மறந்துவிட்டேன். இப்போது, விருது எனக்குக் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது…
இதை என்னால் நம்ப முடியவில்லை என ஆச்சரியத்துடன் கூறியவர், ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த நான், இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கல்வி அளிப்பதுதான் என்னுடைய கனவு. இதற்காகத் தொடர்ந்து காலம்பூரா உழைப்பேன் என்றும் கூறினார்.
இதுபோல எனக்கு எவ்வளவு பண விருதுகள் கிடைத்தாலும், அவை அனைத்தையும் இந்தப் பள்ளிக்காகவே செலவிடுவேன் என்று கூறிய ஹஜப்பா, இதே பள்ளி வளாகத்தில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும் என்பதே என்னுடைய கனவு. அரசாங்கம் அதை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.