டெல்லி:
அமெரிக்க அதிபர் டிரம்ப் 2நாள் சுற்றுப்பயணமாக வரும் 24ந்தேதி இந்தியா வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டிரம்ப் உடன் அவரது மனைவி மெலினா டிரம்பும் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையிலான தூதரகங்கள் மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தன. அதைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் தங்கள் துறைசார் அமெரிக்க அமைச்சர்களான மார்க் எஸ்பர் மற்றும் மைக் பாப்மே ஆகியோரைச் சந்தித்து அதிபர் டிரம்ப் இந்திய வருகை தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து டிரம்ப் இந்திய வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24, 25ந்தேதி இந்தியாவில் தனது மனைவியுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டிரம்ப் டெல்லி மற்றும் குஜராத் மாநிலத்துக்கு விஜயம் செய்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாகவும், இரு நாட்டு அதிகாரிகள் இடையே சந்திப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் இந்திய வருகை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என்றும் இரு நாடுகளின் மக்களிடையே உள்ள அரவணைப்பு மற்றும் நட்பால் குறிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி உள்ளிட்ட அனைத்து துறைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இரு தலைவர்களுக்கும் ஆய்வு செய்வார்கள் என்றும், இரு கூட்டாட்சியை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.