சென்னை:

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அதுகுறித்து  மத்தியஅமைச்சர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆலோசனை நடத்தினார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்தியஅரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று  சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு  அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, நிகழ்ச்சியில் பேசும்போது,

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்பட காவிரி பாயும்  டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது என்று அதிரடியாக கூறினார். மேலும்,  இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி இல்லை என்று கூறியவர்,  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் தொடர்பாக சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்றும் கூறினார்.

தமிழக அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் உள்பட  அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை தமிழக  அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது,  காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஒரு வரலாற்று மிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கு அந்த மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் டெல்லி செல்கிறேன், என்றவர்,  கடலூரில் பெட்ரோல் ஆலை நிறுவப்படும் என்று சொல்லி இருப்பதற்கும் இந்த டெல்டா மாவட்டம் வேளாண் மண்டலமாக மாற்றப்படுவதற்கும் சம்பந்தப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து டெல்லி சென்ற அமைச்சர் ஜெயக்குமார், அங்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் தர்மேந்திர பிரதானுடன்  சந்தித்து ஆலேசானை நடத்தினார்.

அப்போது, காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான தமிழக முதல்வரின் கடிதத்தை வழங்கினார் .

இந்த சந்திப்பின்போது, முக்கிய அதிகாரிகள் உள்பட அதிமுக எம்பி.க்களும் உடனிருந்தனர்.