சிட்னி
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பெய்து வரும் கன மழையால் காட்டுத் தீ பிரச்சினை முடிவுக்கு வர உள்ளது.
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ கட்டுக்கு அடங்காமல் இருந்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலியா மட்டுமின்றி அண்டை நாடுகளும் புகை மற்றும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த புகை உலகம் முழுவதும் சூழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதைக் கட்டுக்குள் கொண்டு வர ஆஸ்திரேலிய அரசு கடும் முயற்சிகள் எடுத்தும் இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது ஆஸ்திரேலியாவில் சிட்னி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக சிட்னி நகரில் மட்டும் 39.15 செமீ மழை பெய்துள்ளது. இதனால் நகரில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு கன மழை ஆகும். மக்கள் பயணத்தைத் தவிர்க்க ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கன மழையால் ஆஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ அணையத் தொடங்கி உள்ளது. வெகு விரைவில் இந்த தீ முடிவுக்கு வர உள்ளது. இது மக்களுக்கு மிகவும் மகிழ்வை உண்டாக்கி இருக்கிறது. அதே வேளையில் காட்டுத்தீயால் பாதிக்கபட்ட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகம் இருக்கலாம் எனவும் வெள்ளத்தில் தீயின் குப்பைகள் அடித்து வரலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.