கோவை:

டிஎன்பிஎஸ்சியில் யார் தவறு செய்திருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்தறை சார்பில், சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாய பெரு விழா, சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள கால்நடை பூங்கா வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் கலந்துகொள்ளும் வகையில், இன்று சென்னையில் இருந்து விமானத்தில் கோவை சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,  டிஎன்பிஎஸ்சி ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நடந்திருக்கும் முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வு முறைகேட்டில் யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள்  திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழற்ற சொன்ன  விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர், இதில் எந்தவித உள்நோக்கமும கிடையாது, திண்டுக்கல் சீனிவாசன் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அவருக்கு 70 வயது ஆகிறது. செருப்பில் சிக்கிய குச்சியை அவரால் குனிந்து எடுக்க முடியாததால், சிறுவனை அழைத்துள்ளார். இதை ஊடகங்கள் பெரிதுப்படுத்திவிட்டன.

உதவிக்குத்தான் அழைத்தேன்  என்று அமைச்சரும் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் சிறிய விஷயத்தை இவ்வாறு பெரிதுப்படுத்தியிருப்பது வேதனை அளிக்கிறது என்றார்.

சிஏஏக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் தொடர்பான கேள்விக்கு,  சிஏஏவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது ஸ்டாலினின் விருப்பம் என்று தெரிவித்தவர், 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து கேட்ட போது, அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால், பிறகு மாணவர்களின் திறனை எப்படி அறிவது. வேலை தேடி வெளி ஊர்களுக்குச் செல்லமுடியாது. உள்ளூரிலேயேதான் இருக்க முடியும் என்றார். தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் வறட்சி இல்லை. நீர்நிலைகள் எல்லாம் நிரம்பியுள்ளன என்றார்.

இந்து பயங்கரவாதம் என்று பால்வளைத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது அவரது சொந்தக் கருத்தே தவிர, கட்சியின் கருத்தல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.