டெல்லி: இந்திய தொழிலதிபர்கள் பெற்ற 50,000 கோடி கடனை மீட்க ஐக்கிய அரபு எமிரேட் வங்கிகள் சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கின்றன.
எமிரேட்ஸ் நீதிமன்ற தீர்ப்புகளின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கிட்டத்தட்ட 9 வங்கிகள் இந்த நடவடிக்கைகளில் இறங்குகின்றன.
இந்த எமிரேட்ஸ் நீதிமன்றத்தில் பதிவான வழக்குகள் பெரும்பாலும் துபாய் அல்லது அபுதாபியைச் சேர்ந்த இந்திய நிறுவனங்களின் துணை நிறுவனங்களால் எடுக்கப்பட்ட கார்ப்பரேட் கடன்களுடன் தொடர்புடையவை.
ஆனாலும், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த எமிரேட்ஸ் என்.பி.டி, மஷ்ரெக் வங்கி மற்றும் அபுதாபி கொமர்ஷல் வங்கி ஆகியவை நடவடிக்கை எடுக்க இருக்கின்றன.
துபாய் அல்லது அபுதாபியில் உள்ள கிளைகள் மூலம் இந்திய நிறுவனங்கள் அல்லது குடிமக்களுக்கு இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, தோஹா வங்கி, நேஷனல் பாங்க் ஆப் ஓமான் மற்றும் நேஷனல் பாங்க் ஆஃப் பஹ்ரைன் போன்ற இன்னும் சில கடன் வழங்குநர்களும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றங்களை நாடி உள்ளன.
பெரும்பாலான கடன்கள் எல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களாகும். நிறுவனங்கள் கேட்ட தொகை அதிகம் என்பதால் வங்கிகள் அதிக முன்னுரிமை கொடுத்துள்ளன. இந்த கடன்கள் எல்லாம் கடந்த 10 முதல் 15 ஆண்டு காலகட்டத்தில் வாங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.