டில்லி
டில்லி சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் ஷகீன்பாக் போராட்ட எதிர்ப்பு வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டில்லியில் உள்ள ஷகீன் பாக் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 15 முதல் தொடர்ந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் அடியோடு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி இந்த போராட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அமித் சாஹ்னி பதிவு செய்துள்ள இந்த மனுவில் டில்லி காவல்துறைக்கு இந்தப் பகுதியில் போக்குவரத்தைச் சீர் செய்ய உத்தரவிடுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் கவுல் மற்றும் ஜோசப் ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு, “தற்போது டில்லி சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த வழக்கு விசாரணை தேர்தலில் ஏதும் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். ஆகவே வாக்குப்பதிவு முடிந்த பிறகு இந்த விசாரணை தொடங்கும்.
வரும் சனிக்கிழமை அன்று டில்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற உள்ளது. தற்போது இந்த மனு மிகவும் முக்கியமானது என்பதை நீதிமன்றம் உணர்ந்துள்ளது. எனவே இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடைபெறும்” என அறிவித்துள்ளது.