சென்னை:

மிழகத்தையே ஆட்டிப்படைத்து வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில், தினசரி புதுப்புதுத்தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.  பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த முறைகேட்டில், டிஎன்சிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக உறுதிபடுத்தப்படாத  தகவல்கள் பரவி வருகின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு அம்பலமான நிலையில், ஏற்கனவே நடைபெற்ற குரூப்1, காவலர் பணித் தேர்வு உள்பட அனைத்து வகையான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது. காவலர் தேர்வை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி.யின் நம்பகத்தன்மை மக்களிடையே கேள்விக்குறியான நிலையில், குருப்-4 தேர்வு முறைகேடு மட்டுமின்றி ஏற்கனவே நடைபெற்று முடிந்த  மட்டுமின்றி, குரூப்-2ஏ, குரூப்-1 தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.

தற்போது   குரூப் 4 தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.  இன்று 6ஆவது நாளாக, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக இடைத்தரகர்கள், பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றவர்கள் என இதுவரை 14 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறையில், காவலராக பணியாற்றும் ஒருவரின் குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் தேர்வு எழுதி பலன்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அந்த காவலரின் மனைவி மற்றும் தம்பி, தம்பி மனைவி, மற்றொரு தம்பி என நான்கு பேர் கடந்தாண்டு குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில், குரூப்-4 தேர்வுக்கு இடைத்தரகாக  செயல்பட்டு வந்த புரோக்கர் ஜெயக்குமார் என்பவரை காவல்துறையினர் வலைவீசி வருகின்றன.  சென்னை முகப்பேர் மேற்கில்  உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த அவர், தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

அவரது வீட்டை நீதிமன்றத்தின் அனுமதியுடன் வருவாய்த்துறை அதிகாரிகளுடன்  சிபிசிஐடி டிஎஸ்பி சந்திரசேகர்  மற்றும் போலீசார்,  வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று சோதனை நடத்தினர். மேலும்,  டிஎன்பிஎஸ்சி அலுவலக உதவியாளர் மாணிக்கம் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மாணிக்கம் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விடைத்தாள்களை கொண்டுசென்ற விவகாரத்தில் பிரபல கொரியர் நிறுவனத்தின் 3 ஊழியர்களுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அந்த 3 ஊழியர்களையும் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனம் நிறுத்தப்பட்டபோது, முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

‘இந்த வழக்கில் ஓடும் வாகனத்தில் வினாத்தாள் எடுத்து மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ஜெயகுமாரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் பெறப்படும் தகவல்களைத் தொடர்ந்தே  குரூப் 2விலும் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம் தேர்வு மையத்தில் தான் கடந்த 2017ம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி நடத்திய அனைத்து தேர்வுகளிலும் தமிழகத்தில் முதல் 100 இடங்களில் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதுதான் இந்த மோசடி வெளிவர முக்கிய காரணமாக அமைந்தது. இந்த மோசடிக்கு மூளையாக சென்னை ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சித்தாண்டி செயல்பட்டுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப 2 தேர்வில் அவரது மனைவி, தம்பிகள் மற்றும் தம்பி மனைவி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் முதல் 10 இடங்களை பிடித்தனர். அதோடு இல்லாமல் மாவட்ட வாரியாக இடைத்தரகர்களை நியமித்து ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பணத்தை வாங்கி கொண்டு 200க்கும் மேற்பட்டோரை தேர்ச்சி பெற வைத்துள்ளார்.

உதவி ஆய்வாளர் சித்தாண்டி ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் கார் டிரைவராக பணியாற்றி உள்ளார். அந்த ஐபிஎஸ் அதிகாரி ஓய்வு பெற்ற பிறகு டிஎன்பிஎஸ்சியில் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இதை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சித்தாண்டி திடீரென தலைமறைவாகி உள்ளார். இதன் காரணமாக உயர்அதிகாரிகளுக்கும் இந்த முறைகேட்டில் பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.