மும்பை

வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதால் இறக்குமதி செய்யப்பட்ட 7000 டன் வெங்காயம் மும்பை துறைமுகத்தில் எடுப்பார் இன்றி கிடந்து அழுகி வருகிறது.

கோடை மற்றும் குளிர்காலம் ஆகிய இரு பருவங்களிலும் வெங்காயம் பயிர் செய்யப்படுகிறது.   கடந்த வருடம்  காலம் தவறிப் பெய்த கடுமையான பருவ மழையால்  வெங்காய பயிர்கள் அதிக அளவில் சேதம் அடைந்தன.  அதனால் வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை தாறுமாறாக உயர்ந்தது.

இந்த விலை உயர்வைத் தடுக்க  மத்திய அரசு எகிப்து, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது.    அப்போது வெங்காய விலை கிலோவுக்கு ரூ.130 ஆக இருந்தது.  ஆனால் அதன் பிறகு உள்நாட்டுச் சந்தையில் வெங்காய வரத்து  அதிகரிக்க தொடங்கியதால் வெங்காய விலை சரியத் தொடங்கியது.

ஏற்கனவே  வியாபாரிகள் தங்கள் தேவையைத் தெரிவித்தபடி மத்திய அரசு இறக்குமதி செய்த வெங்காயம் சுமார் 7000 டன் நவி மும்பையில் உள்ள ஜவகர்லால் நேரு துறை முகத்தில் உள்ளது.  தற்போது உள்நாட்டுச் சந்தையில் வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை ரூ.23 ஆக உள்ளது.   ஆனால் இறக்குமதி வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.45 ஆக உள்ளது.

எனவே இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தை வியாபாரிகள் எடுத்துச் செல்லவில்லை.  கடந்த ஒரு மாதமாகத் துறைமுகத்தில் உள்ள வெளிநாட்டு வெங்காயம் அழுகத் தொடங்கி உள்ளதாகத் துறைமுக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  வெங்காய வர்த்தகர்கள் இந்த விலைக்குறைவுக்கு ஏற்ப இறக்குமதி கட்டணங்களில் தள்ளுபடியை எதிர்பார்ப்பதாகவும் அதை அரசு அளிக்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.