லாகூர்: உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை யாரும் நெருங்க முடியாத நிலை உள்ளதாக புகழ்ந்துரைத்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர்.

இந்திய அணி, தொடர்ச்சியாக உள்நாட்டுத் தொடர்களை வென்றதோடு, தற்போது நியூசிலாந்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி இரக்கமற்ற முறையில் செயல்படுகிறது. யாரும் அதன் அருகில் நெருங்க முடியவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முன்பு மாதிரி இல்லை. அதிக நம்பிக்கையுடன் பந்து வீசுகின்றனர்.

பிற அணிகளுக்கெல்லாம் என்ன ஆனது? உலக கிரிக்கெட்டிற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. முன்பெல்லாம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஓரளவுக்கு சவால் விடுக்கும் அணிகளாக பாகிஸ்தானும் இந்தியாவும் இருந்தன.

ஆனால், தற்போது நிலைமை நிறைய மாறியுள்ளது. சொந்த மண்ணிலேயே நியூசிலாந்து இந்தியாவிடம் சரணடைந்து விட்டது” என்றார்.