ஊகான், சீனா
சீன நாட்டின் ஊகான் நகரில் கொரானா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த 5 நாட்களாக 23 இந்தியர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரொனா வைரஸ் தாக்குதலில் இதுவரை 80 பேர் இறந்து விட்டதாக அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் 2744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த வைரஸ் உள்ளதாக முதலில் கண்டறியப்பட்ட ஊகான் நகரம் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இந்த நகரில் உள்ள மக்கள் அனைவரும் வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாக விட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 23 பேர்கள் இந்தியர்கள் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 நாட்களாகக் காவலில் உள்ளவர்களில் பிரபல இந்திய விஞ்ஞானியான ஸ்ரீகாந்த் என்பவரும் ஒருவர் ஆவார். இவர் ஊகான் நகரில் உள்ள ஒரு மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் பணி புரிகிறார். ஸ்ரீகாந்த் வி சாட் மூலம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த், “எனது சீன சக ஊழியர்கள் கடந்த டிசம்பர் மாதம் ஃப்ளூ போன்ற ஒரு வைரஸ் பரவி வருவதாகப் பேசிக் கொண்டிருந்தனர். எனவே நாங்கள் ஃப்ளூ வைரஸ் தடுப்பு மருந்துகள் குறித்து விவாதித்து வந்தோம். அதன் பிரக் ஜனவரி மாத்ம் 7 மற்றும் 8 தேதிகளில் கொரொனா வைரஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நான் அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டேன். அத்துடன் அதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை குறித்து எனது சீன மற்றும் இந்திய நண்பர்களுக்கு அறிவுறுத்தினேன். இந்த அளவுக்கு அந்த வைரஸ் பரவும் என அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள எங்களை இந்திய அரசு மீட்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வி சாட் தளத்தில் சீனாவில் வசிக்கும் இந்தியர்களுக்காக ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் பல இந்தியர்கள் தற்போது சீனாவில் உள்ள நிலை குறித்து தகவல்கள் தெரிவித்து வருகின்றனர். சீனாவில் வசிக்கும் அமெரிக்கா, ஃபிரான்ஸ் மற்றும் ஈரான் மக்களை ஊகான் நகரில் இருந்து வெளியேற்றி அவர்கள் நாடுகளுக்கு அழைத்துச் செல்ல அந்த நாடுகள் ஏற்பாடுகள் செய்து வருவதாக அந்தக் குழுவில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்றொரு இந்தியர் ”ஊகான் நகரம் முழுவதுமாக வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நகரில் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.. வீட்டை விட்டு வெளியில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது எனது வீட்டில் சுமார் ஒரு வாரத்துக்கான உணவுப் பொருட்கள் மட்டுமே உள்ளது. எங்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டாலும் சீன அரசோ இந்திய அரசோ கவலைப்படாது எனத் தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு இந்திய மாணவர், “நாங்கள் இங்கு துயரடைய விரும்பவில்லை. எங்களைத் தனிமையில் வைத்தாலும் சரி நாங்கள் இந்தியாவுக்கு சென்று தனிமையில் இருக்க விரும்புகிறோம். நாங்கள் ஏராளமான பணம் கொடுத்து தனியார் வாகனங்கள் மூலம் இந்நகரை விட்டுச் செல்ல முயன்றோம். ஆனால் ஓட்டுநர்கள் எங்களை அழைத்துச் செல்ல மறுத்து விட்டனர்.
நாங்கள் உணவுப் பொருட்கள் வாங்கக் கூட வெளியில் செல்ல முடியாதபடி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம். உணவு விடுதிகளும் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் பதட்டத்துடன் செல்கிறது. நாங்கள் இணையம் மூலம் எங்கள் குடும்பத்தினருடன் பேசி வருகிறோம். அவர்களும் இது குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர். இந்திய அரசு எங்களுக்கு ஏதும் உதவி செய்யுமா என எதிர்பார்ப்பில் இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.